பாடசாலை ஆங்கிலக் கல்வியும் எனது எண்ணங்களும்

ஆங்கிலம் - Learn English grammar through Tamil

↑ Grab this Headline Animator

பாடசாலை ஆங்கில கல்வித் திட்டம் பற்றிய ஒரு ஆய்வினை கேள்வி பதிலாக ஆறாம்திணை இணையத் தளத்தில் காணக்கிடைத்தது. அதை வாசிப்பதில் எழுத்துரு (Font) சிக்கலாக இருப்பதால் அதில் சிலப் பகுதிகள் இங்கே இடப்பட்டுள்ளன. காரணம், அது ஆங்கில கல்வி தொடர்பான ஆக்கம் என்பதால், அதுதொடர்பான எனது கருத்துக்களையும் இங்கே பதிந்து வைப்பதற்காகவே என்பதை கருத்தில் கொள்க.

தமிழகக் கல்வி வட்டாரத்தில் ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் அதனை மேம்படுத்தும் முயற்சிகளுக்காக அறியப்பட்டவர் பேராசிரியர் சரசுவதி. இவர் ஐதரபாத் CIEFL நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றவர், ஆங்கில மொழி ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர், பல அரசு பாடநூல்களின் ஆசிரியர், கல்வியிலும் புத்தகங்கள் இயற்றுவதிலும் ஆர்வமுடையவர். மொழிக் கல்வி பற்றிய தமது எண்ணங்களை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து . . .

என “சாய்ராம்” என்பவரின் கேள்விகளுக்கு பேராசிரியர் சரசுவதி அவர்கள் அளித்த பதில்கள்.

கேள்வி: கல்லூரியளவில் ஆங்கிலக் கல்வியின் தேவையும் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

12 ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலம் கற்று, கல்லூரிக்கு வரும் பல மாணவர்களால் ஆங்கிலத்தில் சரியாகப் பேச முடியாததைத் தான் பார்க்கிறோம். என்ன காரணம்?

பாடத்திட்டங்கள் சரியில்லையா?

மாணவர்கள் ஆர்வம் இல்லையா?

ஆசிரியர்களுக்குத் திறமையில்லையா?

பதில்: மாணவர்களுக்கு ஆர்வமில்லையென்று சொல்ல முடியாது. காரணம் பல பேர் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுவதற்காக நிறையப் பணம் செலவழித்துத் தனியார் நிறுவனங்களில் ஆர்வத்துடன் சேர்கிறார்கள்.

ஆசிரியர்களைக் கேட்டால் “பாடங்களை சரியாகத் தான் கற்பிக்கிறோம்” என்பார்கள்.

நமது பாடத்திட்டத்தில் பல குறைகள் இருக்கின்றன.

பேச்சுத் திறனுக்கு பாடத்திட்டத்தில் இடமில்லை. வெளிநாட்டில் வேலைக்குச் சேரும் பல பொறியியல் வல்லுனர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிலும் பலர் ஆங்கிலத்தைச் சரியாகப் பேச முடியாததனால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி: நமது பாடத்திட்டங்கள் 50 ஆண்டுகள் பழமையானது. அதிலே சிற்சில மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. அப்பொழுது ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தக் காலம். அவர்களை திருப்திப் படுத்துவதற்காக ஆங்கில இலக்கியத்தைக் கற்று கொண்டிருந்தோம். ஆனால் நிலைமை இன்னும் மாறவில்லை. தமிழ் மாணவர்கள் ஆங்கில இலக்கியத்தைக் கற்றுக் கொள்ள முடியாமல் நிட்டூரு போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர்களோ சேக்ஸ்பியரும், செல்லியும் முக்கியமானவர்கள் என்பார்கள். ஆனால் சாதாரன மாணவர்களுக்கு எதுவும் புரிவதில்லை. இதற்கு என்ன தான் தீர்வு?

பதில்: ஆங்கிலம் கற்பதைத் தேவை சார்ந்த கல்வியாக்க வேண்டும் என்பேன். எழுதும் திறமையை, பேசும் திறமையை வளர்ப்பதாய் ஆங்கில கல்வி அமைய வேண்டும் என்பேன்.

நமது தேர்வு முறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மாணவர்களின் நினைவுத்திறனைத் தான் நமது தேர்வுகள் சோதிக்கின்றன. அவர்களது அறிவிணை அல்ல.

மாணவர்கள் தேர்வு வழிக்காட்டிப் புத்தகங்களைப் படித்தாலே போதுமானது என்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இப் புத்தகங்களில் இருப்பவற்றை மனப்பாடம் செய்து நல்ல ஆங்கிலத்தில் எழுதி விட்டால் மதிப்பெண்கள் பெற்று விடலாம். ஆசிரியர்கள் கூட இலக்கியம் வாசிக்காமல் பாடங்களை கற்பிக்க முடியுமென்ற சூழ்நிலை தான்.

ஆங்கில மொழியறிவு தான் வேலையைப் பெற்றுத் தருகிறது.

நாம் மேற்குமயமான கல்வித்திட்டத்தில் இருக்கிறோம். நமது கலாச்சாரத்துடன், நமது வேர்களுடன் தொடர்பு கொண்ட கல்வித்திட்டம் வேண்டும்.

நமது கல்வி சமூகத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கே பெரும்பாலும் உதவுகிறது. அது எல்லோரையும் சென்றடைய வேண்டும். ஆங்கில மொழியறிவு இல்லாதவர்கள் சில மட்டங்களைச் சென்றடைய முடியாத நிலை தான் இன்றைக்கும் இருக்கிறது.

நன்றி ஆறாம்திணை

இனி எனது எண்ணங்கள்

உலகமயமாக்கலில் தொடர்பாடல்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு நாடுகளுக்குள் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் பாரியளவில் பெருகிவரும் இக்காலக் கட்டத்தில், உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக ஆங்கிலமொழி வளர்ச்சி கண்டிருப்பதுடன், அதனைக் கற்க வேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

பல வருடங்கள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றாலும், எளிதில் புரியக்கூடிய ஒரு பாடத் திட்டம் பாடசாலையில் இல்லை எனும் பலரதும் கருத்தையே நானும் கொண்டுள்ளேன். குறிப்பாக தமிழ் வழி ஆங்கிலம் கற்பிக்கும் பாடசாலைகளின் பாடத்திட்டம் எளிதில் புரிந்துக்கொள்ளக் கூடியதாக இல்லை. அவ்வாறான கல்வி திட்டமே பலருக்கு ஆங்கிலம் கசக்கும் பாடமாக மாறி விடுகின்றது. உண்மையில் ஆங்கிலம் மிக இலகுவான ஒரு பாடம்; அதை முறையாக விளங்கிக் கற்றோமானால்; விளக்கிக் கற்பிக்கப்படுமானால்.

ஆங்கிலப் பாடத்தில் மட்டுமன்றி அனைத்துப் பாடங்களிலும் இன்று எத்தனையோ இலகுவான நவீன திட்டங்கள் உலகளவில், குறிப்பாக வளர்ந்த நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை எமது சமுதாயத்திற்கு முழுமையாகக் கிடைப்பதாக என்னால் கூற முடியவில்லை. குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு எட்டாத கணியாகவே இவை இன்றும் இருக்கின்றன.

இன்றையக் காலக் கட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி, எமது சமூக வளர்ச்சிக்கும் ஆங்கிலம் அவசியமானது என்பதில் இரண்டு கருத்துக்கள் என்னிடமில்லை.

ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுக்காத நாடுகள்

இத்தாலி, நெதர்லாந்து, பிரான்சு, யப்பான் போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்தோரும், தொழில் வாய்ப்புக்காக அந்நாடுகளுக்கு சென்றோரும் பொதுவாக முன் வைக்கும் ஒரு காரணம் “அந்த நாடுகளிலெல்லாம் ஆங்கிலம் கற்று ஒன்றுமே செய்ய முடியாது” என்பதாகும். அதனை நூற்றுக்கு நூறு வீதம் சரியானக் கருத்து என ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுக்காத நிலை வேண்டுமானால் அந்நாடுகளில் இருக்கலாம். அதற்கு அந்நாடுகளின் மொழி பேசுவோர் கொண்டிருக்கும் இறையான்மை, அரசியல் பலம் போன்றவை பிரதான அங்கமாக விளங்குகின்றன. மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாகவும், அந்தந்த நாடுகளில் அந்நாட்டு மொழியிலேயே அனைத்து கண்டுப் பிடிப்பு விவரங்களும், விளம்பரங்களும், அறிவியலும், தொழில் நுட்பத் தகவல்களும் கிடைக்கப்படுகின்றன.

அதேவேளை அந்நாட்டவர்களும் தமது தாய்மொழிக்கு அடுத்து இரண்டாம் மொழியாக ஆங்கிலத்தைத் தான் பெரும்பான்மையானோர் கற்கின்றனர் என்பதனையும் கவனிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக; ஆங்கில ஆதிக்கம் அற்ற வேற்றோர் மொழி நாட்டிற்கு சென்றோம் என வைத்துக்கொண்டால், அங்கே எந்த மொழியில் பேசுவது, தமிழிலா? குறிப்பிட்ட அந்நாட்டில் ஆங்கில ஆதிக்கம் இல்லாவிட்டாலும், ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகள் ஒரு சிலரேனும் இருக்கவே செய்வர். அவர்களூடாகவே எமது ஆரம்ப அடியை எடுத்து வைக்க வேண்டியிருக்கும். ஏனெனில் ஆங்கிலம் தெரியாதவர் ஒருவருமே இல்லாத நாடு என்று ஒன்றுமே உலகில் இல்லை.

இன்னொரு எடுத்துக்காட்டாக அந்நாடொன்றுக்கு எம்மவர் ஒருவர் சென்றுள்ளார் என வைத்துக்கொள்வோம், அந்நாட்டு மொழியின் சொல் ஒன்றிற்கான அர்த்தம் அறிந்துக்கொள்ள அவசியம் ஏற்படுகின்றது; அப்போது அந்நபர் அச்சொல்லுக்கான பொருளை எவ்வாறு அறிந்துக்கொள்ள முடியும்? எவரூடாக அறிந்துக்கொள்ள முடியும்? ஒன்று ஆங்கிலம் அறிந்த ஒரு மொழிப்பெயர்பாளரின் உதவி தேவைப்படும். அல்லது ஆங்கில அகராதி தேவைப்படும். உலகில் உள்ள அனைத்து மொழிகளிற்குமான தமிழ் விளக்க அகராதி உள்ளதா? ஆனால் உலகின் முன்னனி மொழிகள் அனைத்திலும் ஆங்கில அகராதி உள்ளது.

ஒரு மொழியின் அரசியல் பலமும் பொருளாதார வளமும்

டச்சு, கிரீக், ஹொங்கொங் போன்ற நாடுகளின் மொழி பேசுவோரின் தொகை, தமிழரின் தொகையை விட குறைவானதாக இருந்தப் போதிலும், புதிதாக வெளிவரும் எந்த ஓர் இலத்திரனியல் (கணினி, அழைப்பேசி) பொருளென்றாலும் அதன் விபரக்கோவைகள் அம்மொழிகளிலேயே கிடைக்கப்படுகின்றன. அதனால் அப்பொருற்களின் பயன்பாட்டை அறிதலும் பயன்படுத்தலும் அம்மொழியினருக்கு எளிதாகிவிடுகின்றது. அவ்வாறான சூழ்நிலையில் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை அவர்களுக்கு அவ்வளவாக இல்லை. அதற்கு அந்நாட்டவரின் அரசியல் பின்னனி, ஆட்சி மொழி போன்றன பிரதான அங்கம் வகிக்கின்றன.

ஆனால் நமக்கு?

தமிழரின் நிலை

ஒரு வரையரைக்கு மேலே சென்றால் தமிழில் கற்பதற்கான கற்கை நெறிகளோ, பொத்தகங்களோ இல்லை என்பதே உண்மையாகும். எமது மொழியில் எந்த புதிய கண்டுப்பிடிப்புகளின் விவரங்களோ, விளம்பரங்களோ, அறிவியல் தொழில் நுட்பத் தகவல்களோ உடனே கிடைப்பதில்லை; காலம் கடந்து கிடைப்பவைகளும் முழுமையானதாக இல்லை.

தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆங்கிலம் அவசியம்

நாம் நம் தாய்மொழி மீதுப் பற்றுக் கொண்டு அதன் வளர்ச்சிக்கு உழைக்க விரும்பினாலும், முதலில் ஆங்கிலம் கற்று, ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழுக்கு மொழிமாற்றும் பணியைத்தான் முதலில் செய்ய வேண்டியிருக்கும். என்னைப் பொருத்தமட்டில் தமிழின் வளர்ச்சிக்கு இன்றைய உலகின் அனைத்து அறிவியல் நூல்களும் தமிழில் கிடைக்க வழி வகைச்செய்வதே பிரதான பணியாகக் கருதுகிறேன். வெறுமனே கவிதையும், கற்பனை கதையும் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் தமிழ் வளர்ந்துவிடுமா என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும். இன்று பல தமிழ் இணையத்தளங்களின் ஊடாக கிடைக்கப்படும் தகவல் நுட்பத் தகவல்களில் அதிகமானவை, ஆங்கிலத் தளங்களில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்பவைகளாகும். அல்லது ஆங்கில மொழியில் வாசித்தறிந்த ஒருவர் அதன் மூலக்கருவை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, தமது எழுத்து நடைக்கு ஏற்ப எழுதுபவையாக இருக்கும். இன்று இணையத்தில் காணப்படும் எண்ணற்ற இணைய வசதிகளின் தகவல்கள் சிலவற்றை நாம் தமிழில் பெற்றுக்கொள்கின்றோம் என்றால், அதுவும் ஆங்கிலம் கற்ற தமிழ் பற்றாளர்களின் ஊடாகவே என்பது இன்னொரு எடுத்துக்காட்டாகும். ஒரு இணணயத்தளத்தின் வசதியை பயன்படுத்தும் நாம் அதுத் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், குறிப்பிட்ட தளத்தினரிடமிருந்து பதிலை எந்த மொழியில் பெற்றுக்கொள்வது? ஆங்கிலம் தெரியாவிட்டால் ஆங்கிலம் தெரிந்த தமிழ் வலைப்பதிவரையோ, நண்பரையோ அல்லவா நாடவேண்டியுள்ளது!

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியாவை உற்று நோக்கினால், அங்கேயும் அநேகமான கட்டுரைகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றப்படுபவைகளே என்பதை அறியலாம். அவற்றிலும் முழுமைப்பெறாத செறிவுக் குறைவானக் கட்டுரைகளே அதிகம். இந்நிலை மாறவேண்டும் என்றால், முதலில் நாமும் ஆங்கிலம் கற்று, மொழியாக்கப் பணிகளில் ஈடுப்படுவது தான் ஒரே வழி.

ஒரு தகவல் தொடர்பான தேடலின் பொழுது, ஆங்கிலம் அறிந்தோர் நேரடியாக ஆங்கில விக்கிப்பீடியாவிற்கே சென்று விடுகின்றனர். (தமிழ் விக்கிப்பீடியர்கள் உற்பட) தமிழ் மட்டுமே கற்றோரின் நிலையை எண்ணிப் பாருங்கள்! கூகுள் தேடுபொறி ஒரு சொல் அல்லது சொற்றொடர் தொடர்பாக தமிழில் தட்டச்சிட்டு தேடினால், அதனுடன் தொடர்புடைய ஆக்கத்தை முதல் தெரிவாக தமிழ் விக்கிப்பீடியாவையே காட்டுகிறது.  ஆனால் அங்கே தெடல் தொடர்பான தலைப்புகள் காணப்பட்டாலும் அந்த தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்கள் செறிவுக் குறைவானகளே அதிகம்.  (அதிலும் பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கில் எண்ணிக்கையை அதிகரிப்பதனை மட்டுமே நோக்காகக் கொண்ட) நான்கு வரி கட்டுரைகளே அதிகம். தகவல் பிழையான ஆக்கங்களும் உள்ளன. அவ்வாறான அரை குறை தகவல்கள் எப்பொழுதும் எதனையும் முழுமையாக அறியும் நிலையை தோற்றுவிக்காது. அதேவேளை நீங்கள் ஆங்கிலம் கற்றவராக இருந்தால், எந்தவொரு தகவலையும் நேரடியாக ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும் விக்கிப்பீடியா என்பது ஒரு மூன்றாவது தரவுத்தளம் எனும் வகையில், குறிப்பிட்ட அதிகாரப்பூர்வத் தளத்திற்குச் நேரடியாகச் சென்று அங்கே முழுமையான தகவல்களை அறிந்துக்கொள்வது நம்பகமானது. குறிப்பாக அறிவியல் தகவல்களைப் பெற நாசா, டிஸ்கோவர், நெசனல் ஜியோகிராபிக் போன்ற தளங்களை விட சிறந்தத் தளங்கள் எதுவும் இல்லை. செய்தித்தளங்கள் எனும் போது பிபிசி, ஏபிசி போன்ற தளங்கள் முதன்மையானவை. இவற்றில் இருந்து மேற்கோள் காட்டித்தான் விக்கிப்பீடியா போன்ற தளங்களில் தகவல்கள் தொகுத்துவைக்கப்படுகின்றன.

அதற்கும் ஆங்கிலம் கற்றல் தான் அவசியமாகிறது. நீங்கள் ஆங்கிலம் கற்றவராக இருந்தால் நாமும் அவற்றின் தகவல்களை தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுத்து தமிழுக்கான பணியைச் செய்திடலாம்.

தமிழரின் ஒருமைப்பாடும் ஆங்கில மொழியின் அவசியமும்

தமிழ் தமிழ் என்று பேசுவோரும், அதன் வளர்ச்சிக்காக தன்னார்வ தொண்டாற்றுபவர்களும் ஆங்கிலம் கற்றவர்களாகவே இருப்பதை அவதானியுங்கள். தாமும் ஆங்கிலம் கற்று, தம் பிள்ளைகளுக்கும் ஆங்கிலம் கற்பிப்பவர்களாகவே உள்ளார்கள் என்பது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

தமிழ் நமது தாய் மொழி. அதனை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டியக் கடமை அனைத்து தமிழருக்கும் உண்டு. 80 மில்லியன் தமிழர் உலகெங்கும் பரந்து வாழ்ந்தப் போதும் இறையான்மை இழந்தவர்களாக, அரசியல் பலம் அற்றவர்களாக, தமக்கென ஓர் நாடில்லாதவர்களாக, தமது மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை ஆட்சி அதிகாரத்துடன் நிறுவ முடியாத ஒரு சமுதாயமாக நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர வேண்டும். உலகெங்கும் சிதறி வாழும் தமிழினம் நாமாகவே ஒருமைப்பாட்டின் கீழ் எடுக்கும் முன்னோக்கு திட்டங்கள் ஊடாகவே எமது தாய்மொழியை காக்க முடியும். அதற்கு உலகளவில் ஒருங்கிணைந்த அரசியல் பலம் தேவை. அந்த தேவையை இன்றைய உலக அரசியல் போக்குகளை, நுட்பங்களை, தந்திரங்களை கற்றறிந்து செயலாற்றும் திறன்மிக்க சமுதாயமாக எமது சமுதாயம் மாறிட வேண்டும். அதற்கும் ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் அனைத்து தமிழருக்கும் உண்டு என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டும்.

இன்றைய உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப நாமும் எமது சமுதாயத்தை முன்னோக்குப் பாதைக்கு இட்டுச் செல்ல; தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கும் அதேசமயம், ஆங்கில கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கில மொழி கல்வி தொடர்பில் எளிதான பாடத்திட்டங்களை ஆரம்ப பாடசாலை முதல் உருவாக்கப்பட வேண்டும். வளரும் எமது சமுதாயம் ஆங்கில மொழி ஆளுமைப் பெற்றவர்களாக உலக அரங்கில் மிளிரக் கூடிய வகையில் பாடத்திட்டங்கள் எளிதானதாக அமைதல் வேண்டும். இதுவே என் எண்ணங்களும் எதிர்ப்பார்ப்புகளும் ஆகும்.

தமிழ் வளர! தமிழர் வளர வேண்டும்! தமிழரின் வளர்ச்சிக்கு ஆங்கிலம் அவசியம் கற்க வேண்டும்!

இவ்வாக்கம் எமது ஆங்கிலம் வலைத்தளத்திலிருந்து சற்று விரிவாக்கப்பட்டு மீள்பதிவிடப்பட்டதாகும்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Advertisements

5 thoughts on “பாடசாலை ஆங்கிலக் கல்வியும் எனது எண்ணங்களும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s